Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Joshua 14 >> 

1கானான் தேசத்திலே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களின் தலைவர்களும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

2ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சொந்தமாகப் பங்கிட்டார்கள்.

3மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே பங்கு கொடுத்திருந்தான்; லேவியர்களுக்குமட்டும் அவர்கள் நடுவில் பங்கு கொடுக்கவில்லை.

4மனாசே மற்றும் எப்பிராயீம் என்பவர்கள் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆகவே அவர்கள் லேவியர்களுக்கு தேசத்திலே பங்குகொடுக்காமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களைமட்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

5கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

6அப்பொழுது யூதாவின் கோத்திரத்தார்கள் கில்காலிலே யோசுவாவிடம் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனிதனாகிய மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

7தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாக இருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

8ஆனாலும் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களின் இருதயத்தைப் பயத்தினாலே கரையச்செய்தார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினேன்.

9அந்த நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லி ஆணையிட்டார்.

10இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடு காத்தார்; இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் நடந்தபோது, கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயிடம் சொல்லி இப்பொழுது நாற்பத்தைந்து வருடங்கள் ஆனது; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

11மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது.

12ஆகவே கர்த்தர் அந்த நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியர்களும், பாதுகாப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்த நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடு இருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

13அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான்.

14ஆகவே கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், இந்த நாள்வரை இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சொந்தமானது.

15முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.


  Share Facebook  |  Share Twitter

 <<  Joshua 14 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran