Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Isaiah 13 >> 

1ஆமோத்சின் மகனாகிய ஏசாயா பாபிலோனைக்குறித்து தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தி.

2உயர்ந்த மலையின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு மக்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் நுழைவதற்குச் சைகை காட்டுங்கள்.

3நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.

4திரளான மக்களின் சத்தத்தைப்போன்ற கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட மக்களுடைய தேசங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் கர்த்தர் போர்ப் படையை எண்ணிக்கை பார்க்கிறார்.

5கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.

6அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும்.

7ஆதலால் எல்லாக் கைகளும் தளர்ந்து, எல்லா மனிதரின் இருதயமும் கரைந்துபோகும்.

8அவர்கள் பயமடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் திகைத்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.

9இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடுமையும், மூர்க்கமும், மிகுந்த கோபமுமாக வருகிறது.

10வானத்தின் நட்சத்திரங்களும் விண்மீன்களும் ஒளி கொடாமலிருக்கும்; சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாமலிருக்கும்.

11பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன்.

12மக்களைப் பசும்பொன்னிலும், மனிதனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்.

13இதனால் சேனைகளின் கர்த்தருடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.

14துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் மக்களிடத்திற்குப்போக முகத்தைத்திருப்பி, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள்.

15பிடிபட்ட எவனும் குத்தப்பட்டு, அவர்களைச் சேர்ந்திருந்த எவனும் பட்டயத்தால் விழுவான்.

16அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.

17இதோ, நான் அவர்களுக்கு விரோதமாக மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதிக்காமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,

18வில்லுகளால் இளைஞர்களை கொன்றுவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் மனமிரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

19நாடுகளுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.

20இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கியிருப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர்கள் மந்தையை கூட்டுவதுமில்லை.

21காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.

22அவர்கள் பாழான மாளிகைகளில் நரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் சேதப்படுத்தின அரண்மனைகளில் ஒன்றாகக் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடிக்காது என்கிறார்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Isaiah 13 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran