Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Ezekiel 35 >> 

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி,

3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு எதிராக வந்து, என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவேன்.

4உன்னுடைய பட்டணங்களை வனாந்திரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் மக்களுடைய அக்கிரமம் நிறைவேறும்போது அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே வாளின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

6நான் இரத்தப்பழிக்கு உன்னை ஒப்படைப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காததினால் இரத்தம் பின்தொடரும்.

7நான் சேயீர்மலையைப் பாழும் பாலைவன இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்பவர்கள் இல்லாதபடி அழியச்செய்து,

8அதின் மலைகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்புவேன்; உன்னுடைய மேடுகளிலும் உன்னுடைய பள்ளத்தாக்குகளிலும் உன்னுடைய எல்லா ஆறுகளிலும் வாளால் வெட்டப்பட்டவர்கள் விழுவார்கள்.

9நீ என்றைக்கும் பாலைவனமாக இருக்கும்படி செய்வேன்; உன்னுடைய பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

10இரண்டு இனத்தார்களும் இரண்டு தேசங்களும் கர்த்தரிடத்தில் இருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சொந்தமாக்கிக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,

11நீ அவர்கள்மேல் வைத்த வஞ்சத்தினால் செய்த உன்னுடைய கோபத்திற்குத்தக்கதாகவும், உன்னுடைய பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற நான் உன்னை நியாயம்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

12இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாகச் சொன்ன உன்னுடைய நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

13நீங்கள் உங்களுடைய வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்களுடைய வார்த்தைகளைப் பெருகச்செய்தீர்கள்; அதை நான் கேட்டேன்.

14பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

15இஸ்ரவேல் மக்களின் தேசம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே நடக்கச்செய்வேன்; சேயீர்மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று சொன்னார் என்று சொல்லு.


  Share Facebook  |  Share Twitter

 <<  Ezekiel 35 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran