Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Deuteronomy 27 >> 

1பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

2உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

3உன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் நுழையும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.

4மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

5அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.

6நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளையும்,

7சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து,

8அந்தக் கற்களில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் மிகத்தெளிவாக எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.

9பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்குரிய மக்களானாய்.

10ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

11மேலும் அந்நாளிலே மோசே மக்களை நோக்கி:

12நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

13சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

14அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரையும் பார்த்து:

15கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

16தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

17பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

18குருடனை வழிமாறச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

19அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

20தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன், தன் தகப்பனை அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

21யாதொரு மிருகத்தோடே உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

22தன் தகப்பனுக்காவது தாய்க்காவது மகளாகிய தன் சகோதரியுடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

23தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

24மறைவிலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

25குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

26இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Deuteronomy 27 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran