Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Deuteronomy 18 >> 

1லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம்.

2அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து.

3மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

4உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.

5அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.

6இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திற்கு மனப்பூர்வமாக வந்தால்,

7அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான்.

8அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

9உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.

10தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

11மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

12இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.

13உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.

14நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடுக்கமாட்டார்.

15உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக.

16ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார்.

17அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.

18உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

19என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

20சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

21கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,

22ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Deuteronomy 18 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran