Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 80 >> 

1இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும்.

2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.

3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

4சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

6எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள்.

7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.

9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.

10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.

11அது தன்னுடைய கொடிகளைக் கடல்வரைக்கும், தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.

12இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.

14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;

15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.

16அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.

17உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.

18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.

19சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 80 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran