Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 72 >> 

1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

2அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.

4மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

5சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.

6புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.

9வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.

10தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

11எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.

12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

13எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.

14அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.

15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.

16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.

17அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.

18இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

19அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.

20ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 72 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran