Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 51 >> 

1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.

3என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

4தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.

5இதோ, நான் அநீதியில் உருவானேன்; என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.

9என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து, என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.

11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

12உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

13அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

14தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும்.

15ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.

17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.

18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டும்.

19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 51 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran