Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 49 >> 

1மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.

2பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள்.

3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

4என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?

6தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற,

7ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

8அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.

9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.

10ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

11தங்களுடைய வீடுகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.

12ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.

13இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)

14ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும்.

15ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)

16ஒருவன் செல்வந்தனாகி, அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

17அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.

18அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும்,

19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான்.

20மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 49 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran