Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 45 >> 

1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

2எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,

4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.

5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.

6தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.

7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

8தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.

9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

10மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

11அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்; அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

12தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.

13இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது.

14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

15அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள்.

16உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

17உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக்காலங்களிலும் துதிப்பார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 45 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran