Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 40 >> 

1கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாகச் சாய்ந்து, என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.

2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என்னுடைய கால்அடிகளை உறுதிப்படுத்தி,

3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

4பெருமைக்காரர்களையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், கர்த்தரையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.

5என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் காதுகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

7அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;

8என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

9மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.

10உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.

11கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.

12எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.

13கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.

14என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.

15என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.

16உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

17நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், கர்த்தரோ என்மேல் நினைவாக இருக்கிறார்; தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 40 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran