Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 143 >> 

1கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.

2உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.

3எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.

4என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

5ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.

6என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)

7கர்த்தாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.

8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

9கர்த்தாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.

10உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.

11கர்த்தாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.

12உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; நான் உமது அடியேன்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 143 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran