Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 139 >> 

1கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

2என்னுடைய உட்காருதலையும் என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

4என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.

7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?

8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

9நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,

10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.

12உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.

13நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

14நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.

15நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.

16என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.

17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.

18அவைகளை நான் எண்ணப்போனால், மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.

19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.

20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.

21கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?

22முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன்.

23தேவனே, என்னை ஆராய்ந்து, என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 139 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran