Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 118 >> 

1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.

3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.

5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

6கர்த்தர் என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?

7எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் கர்த்தர் என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.

8மனிதனை நம்புவதைவிட, கர்த்தர் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

9பிரபுக்களை நம்புவதைவிட கர்த்தர் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.

14கர்த்தர் என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

16கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

17நான் சாகாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

18கர்த்தர் என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து கர்த்தரைத் துதிப்பேன்.

20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.

21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.

22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.

23அது கர்த்தராலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

24இது கர்த்தர் உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.

25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.

26கர்த்தருடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

27கர்த்தர் நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.

29கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 118 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran