Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Luke 14 >> 

1ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார்.

2அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.

3இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.

4அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,

5அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார்.

6அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.

7விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:

8ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.

9அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

10நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.

11தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

12அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும்.

13நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக.

14அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.

15அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான்.

16அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.

17விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

18அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

19வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

20வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான்.

21அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான்.

22வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.

23அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;

24அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.

25பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து:

26யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.

27தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.

28உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து,

29அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்:

30இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ?

31அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ?

32கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.

33அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.

34உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

35அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Luke 14 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran