Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Acts 12 >> 

1அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;

2யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

3அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது.

4அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான்.

5அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள்.

6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.

7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது.

8தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

9அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான்.

10அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான்.

11பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான்.

12அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

13பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள்.

14அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள்.

15அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.

16பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

17அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் அவர்களைப் பார்த்து கையசைத்து, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விளக்கி, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.

18பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.

19ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரர்களை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா நாட்டைவிட்டு செசரியா பட்டணத்திற்குப்போய், அங்கே தங்கியிருந்தான்.

20அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.

21குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.

22அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.

23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.

24தேவவசனம் வளர்ந்து பெருகியது.

25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Acts 12 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran