Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  The Song of Songs 5 >> 

1என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்திற்கு வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள்.

2நான் நித்திரைசெய்தேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

3என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

4என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.

5என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.

6என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.

7நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.

8எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

9பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பத்தாயிரம்பேர்களில் சிறந்தவர்.

11அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது; அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும், காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.

12அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.

13அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

14அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

15அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.

16அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.


  Share Facebook  |  Share Twitter

 <<  The Song of Songs 5 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran