Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Exodus 37 >> 

1பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

2அதை உள்ளும் வெளியும் சுத்தப்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,

3அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,

4சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

5அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.

6கிருபாசனத்தையும் சுத்தப்பொன்னினால் செய்தான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.

7தகடாக அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

8ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு ஒரே வேலைப்பாடாகவே செய்தான்.

9அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாகவும் இருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.

10மேஜையையும் சீத்திம் மரத்தால் செய்தான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

11அதைப் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,

12சுற்றிலும் அதற்கு நான்கு விரல் அளவான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் விளிம்பையும் உண்டாக்கி,

13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் தைத்தான்.

14அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாக இருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.

15மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

16மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிப்பொருட்களையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் சுத்தப்பொன்னினால் உண்டாக்கினான்.

17குத்துவிளக்கையும் சுத்தப்பொன்னினால் அடிப்புவேலையாக உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.

18குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.

19ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.

20விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.

21அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.

22அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் சுத்தப்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டது.

23அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான்.

24அதையும் அதின் பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து சுத்தப்பொன்னினால் செய்தான்.

25தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாக இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஒரே வேலைப்பாடாக இருந்தது.

26அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், சுத்தப்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,

27அந்தவிளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,

28சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

29பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Exodus 37 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran