Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Exodus 31 >> 

1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,

3வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும்,

4இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் அலங்காரவேலைகளைச் செய்வதற்கும்,

5மற்றும் எல்லாவித வேலைகளையும் யூகித்துச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.

6மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனோடு துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள்.

7ஆசரிப்புக்கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள எல்லா பணிப்பொருட்களையும்,

8மேஜையையும் அதின் பணிப்பொருட்களையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் எல்லா கருவிகளையும், தூபபீடத்தையும்,

9தகனபலிபீடத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

10ஆராதனை ஆடைகளையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும்,

11அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

12மேலும், கர்த்தர் மோசேயிடம்:

13நீ இஸ்ரவேலர்களை நோக்கி, நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும்.

14ஆகையால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதின் பரிசுத்தத்தை கெடுக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; அந்த நாளிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடி துண்டிக்கப்பட்டுபோவான்.

15ஆறுநாட்களும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை செய்யாமல் ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

16ஆகையால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளவேண்டும்.

17அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அடையாளமாக இருக்கும்; ஆறுநாட்களுக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தார் என்றார்.

18சீனாய்மலையில் அவர் மோசேயோடு பேசி முடிந்தபின்பு, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய இரண்டு சாட்சி பலகைகளை அவனிடம் கொடுத்தார்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Exodus 31 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran