Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Genesis 35 >> 

1தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குக் காட்சியளித்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

2அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்.

3நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து, நான் நடந்த வழியிலே என்னுடன் இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

4அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.

5பின்பு பயணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தார்களுக்கு தேவனாலே பயங்கரம் உண்டானதால், அவர்கள் யாக்கோபின் மகன்களைப் பின்தொடரவில்லை.

6யாக்கோபும் அவனுடன் இருந்த எல்லா மக்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.

7அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பினபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் என்று பெயரிட்டான்.

8ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது.

9யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, அவனை ஆசீர்வதித்து:

10இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயரிட்டார்.

11பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு தேசமும் பற்பல தேசங்களின் மக்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.

12நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,

13தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.

14அப்பொழுது யாக்கோபு தன்னோடு அவர் பேசின இடத்திலே ஒரு கல்தூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் ஊற்றினான்.

15தேவன் தன்னோடு பேசின அந்த இடத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பெயரிட்டான்.

16பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.

17அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய் என்றாள்.

18மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.

19ராகேல் இறந்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்.

20அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

21இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.

22இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு உறவுகொண்டான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

23யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.

24யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.

25தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள்.

26காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற மகன்கள்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த மகன்கள்.

27பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

28ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்து,

29உயிர்பிரிந்து இறந்து, தன் ஜனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்செய்தார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Genesis 35 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran