Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Genesis 23 >> 

1சாராள் நூற்று இருபத்தேழு வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.

2கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் இறந்தாள்; அப்பொழுது ஆபிரகாம், சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

3பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி:

4நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாக இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்த இறந்த உடலை நான் அடக்கம்செய்வதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைநிலத்தைத் தரவேண்டும் என்றான்.

5அதற்கு ஏத்தின் வம்சத்தார் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:

6எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம்செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.

7அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் வம்சத்தாராகிய அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,

8அவர்களோடு பேசி: என்னிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்ய உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய மகனாகிய எப்பெரோன்,

9தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா எனப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை நிலமாகத் தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அதற்குரிய விலைக்கு அவர் அதைத் தரட்டும் என்றான்.

10எப்பெரோன் ஏத்தின் வம்சத்தார் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் வம்சத்தார் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்கு மறுமொழியாக:

11அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குக் கொடுக்கிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குக் கொடுக்கிறேன், என் இனத்தாரின் முன்னிலையில் அதை உமக்குக் கொடுக்கிறேன், உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம்செய்யும் என்றான்.

12அப்பொழுது ஆபிரகாம் அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,

13தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம்செய்வேன் என்றான்.

14அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:

15என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும் என்றான்.

16அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான்.

17இந்த விதமாக மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்த இடமும், அதிலுள்ள குகையும், நிலத்திலுள்ள அனைத்து மரங்களும்,

18அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் வம்சத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.

19அதற்குப்பின்பு ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்செய்தான்.

20இப்படி ஏத்தின் வம்சத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டது.


  Share Facebook  |  Share Twitter

 <<  Genesis 23 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran