Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Genesis 15 >> 

1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன் என்றார்.

2அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே என்றான்.

3பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான் என்றான்.

4அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான் என்று சொல்லி,

5அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும் என்றார்.

6அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார்.

7பின்னும் அவர் அவனை நோக்கி: இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.

8அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.

9அதற்கு அவர்: மூன்றுவயது இளங்கன்றையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.

10அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை.

11பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.

12சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.

13அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும்.

14இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்.

15நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய்.

16நான்காம் தலைமுறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

17சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.

18அந்த நாளிலே கர்த்தர் ஆபிராமோடு உடன்படிக்கைசெய்து, எகிப்தின் நதிதுவங்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிவரை உள்ளதும்,

19கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,

20ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,

21எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன்னுடைய சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Genesis 15 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran