Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Leviticus 16 >> 

1ஆரோனின் இரண்டு மகன்கள் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

2கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.

3ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.

4அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு,

5இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.

6பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,

7அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,

8அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,

9கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,

10போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;

11பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக்கொன்று,

12கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,

13தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.

14பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன்.

15பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,

16இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.

17பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.

18பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,

19தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.

20அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,

21அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடக்கடவன்.

22அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.

23ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,

24பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,

25பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.

26போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.

27பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

28அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.

29ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருக்கக்கடவது.

30கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.

31உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.

32அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,

33பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

34இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Leviticus 16 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran