Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Leviticus 1 >> 

1கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி:

2நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.

3அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில், தான் அங்கிகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து,

4தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கிகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,

5கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

6பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டக்கடவன்.

7அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி,

8அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

9அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.

10அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,

11கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

12பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.

13குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.

14அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.

15அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு,

16அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,

17பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.


  Share Facebook  |  Share Twitter

 <<  Leviticus 1 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran