Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Hebrews 1 >> 

1முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன்,

2இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார்.

3இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

4இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார்.

5எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா?

6மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

7தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.

8குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.

9நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;

10கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது;

11அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்;

12ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

13மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா?

14அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?


  Share Facebook  |  Share Twitter

 <<  Hebrews 1 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran