Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Numbers 30 >> 

1மோசே இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் தலைவர்களை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்:

2ஒருவன் கர்த்தருக்கு எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யவேண்டும்.

3தன்னுடைய தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன்னுடைய சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைச்செய்து எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டால்,

4அவள் செய்த பொருத்தனையையும், அவள் செய்துக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

5அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

6அவள் பொருத்தனை செய்யும்போதும், தன்னுடைய உதடுகளைத் திறந்து தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்கு கணவன் இருந்தால்,

7அப்பொழுது அவளுடைய கணவன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

8அவளுடைய கணவன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானென்றால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

9ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு பெண்ணாவது தன்னுடைய ஆத்துமாவை எந்த நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.

10அவள் தன்னுடைய கணவனுடைய வீட்டில் எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும்,

11அவளுடைய கணவன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாக இருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.

12அவளுடைய கணவன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி செய்தால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய கணவன் அவைகளைச் செல்லாதபடி செய்ததினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

13எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய கணவன் உறுதிப்படுத்தவும் முடியும், செல்லாதபடி செய்யவும் முடியும்.

14அவளுடைய கணவன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள் பெயரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் உறுதிப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமல்போனதினால், அவைகளை உறுதிப்படுத்துகிறான்.

15அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி செய்தால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.

16கணவனையும், மனைவியையும், தகப்பனையும், தகப்பனுடைய வீட்டில் சிறு வயதில் இருக்கிற அவனுடைய மகளையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.


  Share Facebook  |  Share Twitter

 <<  Numbers 30 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran