Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Job 31 >> 

1என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி?

2அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ?

3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும்.

4அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ?

5நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று,

6சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.

7என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால்,

8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது.

9என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,

10அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.

11அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.

12அது பாதாளம்வரை எரிக்கும் நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும்.

13என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால்,

14தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன்.

15தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் அவனையும் உண்டாக்கினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?

16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,

17தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?

18என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன்.

19ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,

20அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும்,

21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால்,

22என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, என் கையின் எலும்பு முறிந்துபோவதாக.

23தேவன் தண்டிப்பார் என்றும், அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.

24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,

25என் செல்வம் அதிகமென்றும், என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,

26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:

27என் மனம் இரகசியமாக மயங்கி, என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,

28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

29என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ?

30அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.

31அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ?

32அன்னியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?

34மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ?

35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.

36அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே.

37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.

38எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், அதின் வரப்புகள்கூட அழுகிறதும்,

39கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,

40அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும் என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.


  Share Facebook  |  Share Twitter

 <<  Job 31 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran