Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Job 13 >> 

1இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.

2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.

3சர்வவல்லவருடன் நான் பேசினால் நல்லது; தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.

4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.

5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.

6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.

7நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ?

8அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?

9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ?

10நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.

11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?

12உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.

13நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.

14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?

15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.

16அவரே என் பாதுகாப்பு; மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான்.

17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.

18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.

19என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.

20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.

21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக.

22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.

23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.

24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?

25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?

26மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர்.

27என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.

28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Job 13 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran