Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Proverbs 27 >> 

1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.

2உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

3கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.

4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?

5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

6நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.

8தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.

9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

10உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன்.

11என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.

13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.

14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.

15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி.

16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

17இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.

18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

19தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.

20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.

21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

23உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.

24செல்வம் என்றைக்கும் நிலைக்காது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.

26ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

27வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், உன் வீட்டாரின் உணவுக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Proverbs 27 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran