Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Proverbs 2 >> 

1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,

2நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

4அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,

5அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.

7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.

8அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

10ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,

11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,

13இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

17ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.

18அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.

19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.

21நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

22துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Proverbs 2 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran