Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  2 Chronicles 19 >> 

1யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான்.

2அப்பொழுது அனானியின் மகனாகிய யெகூ என்னும் தரிசனம் காண்கிறவன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதனால் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

3ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.

4யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.

5அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,

6அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

7ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

8அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியர்களிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக்குறித்தும் விவாதக் காரியங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,

9அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,

10பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.

11இதோ, ஆசாரியனாகிய அமரியா, கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் மகனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாக இருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  2 Chronicles 19 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran