Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  2 Chronicles 14 >> 

1அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.

2ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

3அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

4தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து,

5யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது.

6கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.

7அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.

8யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள்.

9அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாவரை வந்தான்.

10அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

11ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

12அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.

13அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; கர்த்தருக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து,

14கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் தோற்கடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டானது; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாக அகப்பட்டது.

15மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  2 Chronicles 14 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran