Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  2 Chronicles 11 >> 

1ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான்.

2தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது:

3நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி:

4நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள்.

5ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.

6அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,

7பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,

8காத்தும், மரேஷாவும், சீப்பும்,

9அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,

10சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி,

11அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும்,

12யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.

13இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.

14லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.

15அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.

16அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள்.

17இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள்.

18ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான்.

19இவள் அவனுக்கு ஏயூஸ், சமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.

20அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளை திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.

21ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.

22ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.

23அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  2 Chronicles 11 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran