Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  2 Samuel 9 >> 

1யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

2அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.

3அப்பொழுது ராஜா: தேவனுக்காக நான் சவுலின் குடும்பத்தார்களுக்குத் தயைசெய்யும்படி அவன் குடும்பத்தார்களில் யாராவது ஒருவன் இன்னும் மீதியாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான் என்றான்.

4அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.

5அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.

6சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

7தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானிற்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான்.

8அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.

9ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.

10எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்.

11சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான்.

12மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.

13மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.


  Share Facebook  |  Share Twitter

 <<  2 Samuel 9 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran