Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  1 Chronicles 19 >> 

1அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, நானும் அவனுடைய மகனாகிய இவனுக்கு தயவுசெய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல தூதுவர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியர்களின் தேசத்திலே வந்தபோது,

3அம்மோனியர்களின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனுக்கு மரியாதை கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவனுடைய வேலைக்காரர்கள் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.

4அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான்.

5அந்த மனிதர்கள் வரும்போது, அவர்களுடைய செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.

6அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோனியர்கள் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியர்களின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரர்களும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி,

7முப்பத்திரெண்டாயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவனுடைய மக்களையும் கூலிப்படையாக அழைத்தனுப்பினான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே முகாமிட்டார்கள்; அம்மோனியர்கள் தங்களுடைய பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்செய்யவந்தார்கள்.

8அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.

9அம்மோனிய மக்கள் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலருகில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாக நின்றார்கள்.

10யுத்த இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருப்பதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதை சீரியர்களுக்கு எதிராக நிறுத்தி,

11மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன்னுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:

12என்னைவிட சீரியர்கள் பலங்கொண்டால் நீ எனக்குத் துணை நில்; உன்னைவிட அம்மோன் இராணுவத்தினர்கள் பலங்கொண்டால் நான் உனக்குத் துணை நிற்பேன்.

13தைரியமாக இரு; நாம் நம்முடைய மக்களுக்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

14பின்பு யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்களோடு யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக தப்பியோடினார்கள்.

15சீரியர்கள் தப்பியோடுவதை அம்மோன் இராணுவத்தினர்கள் கண்டபோது, அவர்களும் அவனுடைய சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்; யோவாப் திரும்ப எருசலேமிற்கு வந்தான்.

16தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு மறுகரையில் சீரியர்களை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.

17அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்கு அருகில் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியர்களுக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின்பு அவனோடு யுத்தம்செய்தார்கள்.

18சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் ஏழாயிரம் இரதங்களின் மனிதர்களையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.

19தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதை ஆதாரேசருக்குப் பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் கண்டபோது, அவர்கள் தாவீதோடு சமாதானம்செய்து, அவனுக்குப் பணிவிடை செய்தார்கள்; அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் மனமில்லாதிருந்தார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  1 Chronicles 19 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran