Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  1 Chronicles 14 >> 

1தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.

2கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

3எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

4எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

5இப்கார், எலிசூவா, எல்பெலேத்,

6நோகா, நெப்பேக், யப்பியா,

7எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

8தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.

9பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

10பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

11அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.

12அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.

13பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

14அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

15முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.

16தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் காசேர்வரைத் தோற்கடித்தார்கள்.

17அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.


  Share Facebook  |  Share Twitter

 <<  1 Chronicles 14 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran