Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  1 Corinthians 13 >> 

1நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

2நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை.

3எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை.

4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,

5அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது,

6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

7எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.

8அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.

9நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது.

10நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.

11நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.

12இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

13இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.


  Share Facebook  |  Share Twitter

 <<  1 Corinthians 13 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran