Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Deuteronomy 34 >> 

1பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நெபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

2நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி சமுத்திரம்வரை உள்ள யூதா தேசம் அனைத்தையும்,

3தென்புறத்தையும், சோவார்வரை உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும் காண்பித்தார்.

4அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்களுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்த தேசம் இதுதான், இதை உன்னுடைய கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அந்த இடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.

5அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான்.

6அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் செய்தார். ஒருவனுக்கும் அவனுடைய பிரேதக்குழி எங்கேயென்று இந்நாள்வரைக்கும் தெரியாது.

7மோசே மரணமடைகிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

8இஸ்ரவேல் மக்கள் மோவாபின் சமவெளிகளில் மோசேக்காக முப்பது நாட்கள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

9மோசே நூனின் மகனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்ததால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டான்; இஸ்ரவேல் மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

10மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா வேலைக்காரர்களுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பி நடப்பித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

11அவன் இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகச் செய்த சகல வல்லமையான செயல்களையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

12கர்த்தரை முகமுகமாக அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அவனுக்குப்பின்பு எழும்பினதில்லை என்று விளங்கும்.



 <<  Deuteronomy 34 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Single Panel

Laporan Masalah/Saran