Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 42 >> 

1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

2என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

3உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது.

4முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

5என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

6என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

8ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்.

9நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

10உன் தேவன் எங்கே என்று என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, என்னை நிந்திப்பது என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.



 <<  Psalms 42 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Single Panel

Laporan Masalah/Saran