Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Jude 1 >> 

1இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:

2உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.

3பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.

4ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.

5நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.

6தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார்.

7அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

8அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.

9பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.

10இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

11இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

12இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,

13தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

14ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,

15தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.

16இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.

17நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.

18கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.

19இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.

20நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,

21தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள்.

22அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,

23பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.

24உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,

25தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Jude 1 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran