Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Isaiah 29 >> 

1தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,

2அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.

3உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன்.

4அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாக மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் குறிசொல்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும்.

5உன்மேல் வருகிற அந்நியரின் கூட்டம் பொடித்தூள் அளவாகவும், பலவந்தரின் கூட்டம் பறக்கும் பதர்களைப்போலவும் இருக்கும்; அது திடீரென்று உடனே சம்பவிக்கும்.

6இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புயலினாலும், சுட்டெரிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.

7அரியேலின்மேல் போர்செய்கிற திரளான சகல தேசங்களும், அதின்மேலும் அதின் அரண்மேலும் போர்செய்து, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இரவுநேரத் தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.

8அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும்.

9தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சைரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.

10கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரச்செய்து, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரர்களாகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.

11ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புத்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் முடியாது, இது முத்திரை போடப்பட்டிருக்கிறது என்பான்.

12அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புத்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.

13இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

14ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

15தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ!

16ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?

17இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும்.

18அக்காலத்திலே செவிடர்கள் புத்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடர்களின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.

19சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.

20கொடியவன் அற்றுப்போவான், பரியாசக்காரன் இல்லாமற்போவான்.

21ஒரு வார்த்தைக்காக மனிதனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நியாயமில்லாமல் துரத்தி, இப்படி அக்கிரமம்செய்ய வகைதேடுகிற அனைவரும் அழிக்கப்படுவார்கள்.

22ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

23அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.

24வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Isaiah 29 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran