Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Jeremiah 26 >> 

1யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் கர்த்தரால் உண்டான வார்த்தை:

2நீ கர்த்தருடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பணிந்துகொள்ள வருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிமக்கள் அனைவருடனும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

3அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பிற்காக நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனவருத்தமடையும் விதத்தில் ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.

4நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கவும்,

5நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நடப்பதற்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,

6நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்.

7எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் கேட்டார்கள்.

8எல்லா மக்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் அவனைப்பிடித்து: நீ இறக்கவே இறக்கவேண்டும்.

9இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் அழிந்து போகும் என்று, நீ கர்த்தருடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, மக்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.

10யூதாவின் பிரபுக்கள் இந்த நடவடிக்கைகளைக்கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.

11அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு உரியவன்; உங்கள் காதுகளால் நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.

12அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா மக்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்திற்கும் இந்த நகரத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.

13இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனம் வருந்துவார்.

14நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.

15ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் காதுகளில் சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.

16அப்பொழுது பிரபுக்களும் எல்லா மக்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பெயரில் நம்முடனே பேசினான் என்றார்கள்.

17தேசத்தில் மூப்பர்களில் சிலர் எழும்பி, சபையாகிய மக்களை நோக்கி:

18யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் எல்லா மக்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகும்; இந்த ஆலயத்தின் மலை காட்டிலுள்ள மேடுகளாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொன்னார் என்று சொன்னான்.

19அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனவருத்தமடைந்தார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரச்செய்கிறவர்களாயிருக்கிறோமே.

20கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் மகன் உரியா என்னும் ஒரு மனிதனும் கர்த்தருடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்திற்கும் இந்த தேசத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.

21யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய எல்லா பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோட தீர்மானித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்தில் சேர்ந்தான்.

22அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும் அவனுடன் வேறு சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.

23இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தால் அவனை வெட்டி, அவன் உடலை ஏழை மக்களின் கல்லறைகளிடத்தில் எறிந்துவிட்டான் என்றார்கள்.

24ஆகிலும் எரேமியாவைக் கொல்ல மக்களின் கையில் ஒப்புக்கொடுக்காமல், சாப்பானுடைய மகனாகிய அகீக்காம் அவனுக்கு உதவியாயிருந்தான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Jeremiah 26 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran