Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Jeremiah 18 >> 

1கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.

3அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான்.

4குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான்.

5அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:

6இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.

7பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே,

8நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன்.

9கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

10அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.

11இப்பொழுதும், நீ யூதாவின் மனிதரையும் எருசலேமின் குடிமக்களையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை ஏற்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தைத் திட்டமிடுகிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்துங்களென்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.

12ஆனாலும் அவர்கள்: அது முடியாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தின் கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.

13ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று அந்நிய மக்களுக்குள் விசாரித்துப்பாருங்கள்; மிகவும் அதிர்ச்சியடையும் காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.

14லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?

15என் மக்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; ஒழுங்குபடுத்தப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களை முந்தின பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.

16நான் அவர்களுடைய தேசத்தை அழிக்கவும், என்றென்றைக்கும் சத்தமிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.

17கொண்டல்காற்றுப் பறக்கடிப்பதுபோல நான் அவர்களை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளில் என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.

18அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

19கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

20நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய கடுங்கோபத்தை அவர்களை விட்டுத்திருப்புவதற்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும்.

21ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்திற்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளையில்லாதவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் கணவன்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் போரில் பட்டயத்தால் மடியக்கடவர்கள்.

22நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

23ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்தில் இப்படி அவர்களுக்குச் செய்யும்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Jeremiah 18 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran