Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Ezekiel 44 >> 

1பின்பு அவர் என்னை கிழக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிவாசல் வழியே திரும்பச்செய்தார்; அது பூட்டப்பட்டிருந்தது.

2அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் நுழைவதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் நுழைந்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.

3இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் உணவு உண்பதற்காக இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, மறுபடியும் அதின் வழியாகப் புறப்படுவான் என்றார்.

4பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாக ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

5அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, கர்த்தருடைய ஆலயத்தின் எல்லா நியமங்களையும் அதின் எல்லா சட்டங்களையும் குறித்து நான் உன்னுடன் சொல்வதையெல்லாம் நீ உன்னுடைய மனதிலே கவனித்து, உன்னுடைய கண்களினாலே பார்த்து, உன்னுடைய காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாக ஆலயத்திற்குள் நுழைவதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,

6இஸ்ரவேல் மக்களாகிய கலகக்காரர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளும் போதும்.

7நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய கொழுப்பையும், இரத்தத்தையும் செலுத்தும்போது, என்னுடைய ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நியர்களை என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டு வந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என்னுடைய உடன்படிக்கையை மீறினார்கள்.

8நீங்கள் என்னுடைய பரிசுத்த பொருட்களின் காவலைக் காக்காமல், உங்களுக்கு விருப்பமானவர்களை என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே என்னுடைய காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்.

9கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களின் நடுவில் இருக்கிற எல்லா அந்நியர்களிலோ விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நியர் ஒருவனும் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதில்லை.

10இஸ்ரவேல் வழிதப்பிப்போகும்போது, என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியர்களும் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

11ஆகிலும் அவர்கள் என்னுடைய ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என்னுடைய ஆலயத்தில் வேலைசெய்து, என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரர்களாக இருப்பார்கள்; அவர்கள் மக்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு வேலை செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரர்களாக இருப்பார்கள்.

12அவர்கள் இவர்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு வேலைசெய்து, இஸ்ரவேல் மக்களை அக்கிரமத்தில் விழச்செய்தபடியினால், நான் என்னுடைய கையை அவர்களுக்கு விரோதமாக உயர்த்தினேன், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

13அவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஆராதனை செய்வதற்கு என்னுடைய அருகில் வராமலும், மகா பரிசுத்தமான இடத்தில் என்னுடைய பரிசுத்த பொருட்களில் யாதொன்றிற்கு அருகில் வராமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்களுடைய வெட்கத்தையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கவேண்டும்.

14ஆலயத்தின் எல்லா வேலைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாக இருக்கக் கட்டளையிடுவேன்.

15இஸ்ரவேல் மக்கள், என்னை விட்டு வழிதப்பிப்போகும்போது, என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் மகனாகிய லேவியர்கள் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய அருகில் சேர்ந்து, கொழுப்பையும், இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என்னுடைய சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

16இவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார்கள், இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என்னுடைய பீடத்தைக் அருகே வந்து, என்னுடைய காவலைக் காப்பார்கள்.

17உள்முற்றத்தின் வாசல்களுக்குள் நுழைகிறபோது, சணல்நூல் ஆடைகளை அணிந்துக்கொள்வார்களாக; அவர்கள் உள்முற்றத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனை செய்யும்போது, ஆட்டு ரோமத்தாலான உடையை அணியக்கூடாது.

18அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடுப்பில் சணல்நூல் ஆடைகளையும் அணியவேண்டும்; வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது.

19அவர்கள் வெளிமுற்றமாகிய வெளிமுற்றத்திலே மக்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் நேரத்தில் அணிந்திருந்த தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்; தங்களுடைய ஆடைகளாலே மக்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடாது.

20அவர்கள் தங்களுடைய தலைகளைச் சிரைக்காமலும், தங்களுடைய முடியை நீளமாக வளர்க்காமலும், தங்களுடைய தலைமுடியைக் கத்தரிக்கக்கவேண்டும்.

21ஆசாரியர்களில் ஒருவனும், உள்முற்றத்திற்குள் நுழையும்போது, திராட்சைரசம் குடிக்கக்கூடாது.

22விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் திருமணம்செய்யாமல், இஸ்ரவேல் வீட்டாளாகிய கன்னிகையையோ, ஒரு ஆசாரியரின் மனைவியாக இருந்த விதவையையோ திருமணம்செய்யலாம்.

23அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டு இல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என்னுடைய மக்களுக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

24வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாக இருந்து, என்னுடைய நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என்னுடைய நியாயப்பிரமாணத்தையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கவேண்டும்.

25தகப்பன், தாய், மகன், மகள், சகோதரன், கணவனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேதவிர, அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படக்கூடாது.

26அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாட்கள் எண்ணப்படவேண்டும்.

27அவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உள்முற்றத்திற்குள் நுழைகிற நாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தவேண்டும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

28அவர்களுக்குரிய பங்கு என்னவென்றால்: நானே அவர்களுடைய பங்கு; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்கு சொத்தையும் கொடுக்காமல் இருங்கள்; நானே அவர்களின் சொத்து.

29உணவுபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் சாப்பிடுவார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை செய்யப்பட்டதெல்லாம் அவர்களுக்கு உரியதாக இருப்பதாக.

30எல்லாவித முதற்பழங்களில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாகச் செலுத்தும் எந்தவிதமான பொருள்களும் ஆசாரியர்களுக்கு உரியதாக இருப்பதாக; உங்களுடைய வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படி நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

31பறவைகளிலும் மிருகங்களிலும் தானாகச் செத்ததும் மிருகத்தால் வேட்டையாடப்பட்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் சாப்பிடக்கூடாது.


  Share Facebook  |  Share Twitter

 <<  Ezekiel 44 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran