Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Revelation 7 >> 

1இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.

2ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:

3நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான்.

4முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.

5யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.

6ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.

7சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.

8செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.

9இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.

10அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.

11தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

12ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

13அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

14அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.

15எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.

16இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.

17சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார் என்றான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Revelation 7 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran