Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Romans 4 >> 

1அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?

2ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.

3வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

4வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.

5ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

6அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:

7எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

8எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

9இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.

10அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.

11மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,

12விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

13அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

14நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.

15மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.

16எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.

17அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.

18உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.

19அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.

20தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,

21தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.

22எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

23அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

24நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

25அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Romans 4 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran