Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Romans 12 >> 

1அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.

2நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

3அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.

4ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல,

5அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.

6நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும்.

7ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,

8புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும்.

9உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.

10சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

11அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

12நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள்.

13பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.

14உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.

15சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.

16ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.

17ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள்.

18உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள்.

19பிரியமானவர்களே, பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.

20அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

21நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.


  Share Facebook  |  Share Twitter

 <<  Romans 12 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran