Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Ecclesiastes 6 >> 

1சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.

2அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.

3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன்.

4அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயர் காரிருளால் மூடப்படும்.

5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.

6அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?

7மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை.

8இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

9ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது.

10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.

11மாயையைப் பெருகச்செய்கிற அநேக காரியங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனிதர்களுக்குப் பயன் என்ன?

12நிழலைப்போன்ற மாயையான தன்னுடைய வாழ்நாளை போக்கும் மனிதர்களுக்கு இந்த வாழ்வில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே நடக்கும் காரியம் இன்னதென்று மனிதனுக்கு அறிவிப்பவன் யார்?


  Share Facebook  |  Share Twitter

 <<  Ecclesiastes 6 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran