Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Psalms 27 >> 

1கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?

2என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.

3எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.

4கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

6இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, கர்த்தரைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.

7கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.

8என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.

9உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; நீரே எனக்கு உதவி செய்பவர்; என்னுடைய இரட்சிப்பின் தேவனே, என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.

10என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.

12என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.

13நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

14கர்த்தருக்குக் காத்திரு, தைரியமாக இரு, அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 27 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran