Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Micah 6 >> 

1கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, மலைகளுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கட்டும்.

2மலைகளே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவருடைய மக்களோடு வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலர்களோடு அவர் வழக்காடுவார்.

3என் மக்களே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை வருத்தப்படுத்தினேன்? எனக்கு எதிரே பதில் சொல்.

4நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்து, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே, ஆரோன், மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.

5என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.

6என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும், ஒருவயதுடைய கன்றுக்குட்டிகளோடும் அவருடைய சந்நிதியில் வரவேண்டுமோ?

7ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாக ஓடுகிற பத்தாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்குவதற்காக என் முதற் பிறந்தவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?

8மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

9கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.

10துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?

11கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?

12அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.

13ஆகையால் நான் உன் பாவங்களுக்காக உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னைப் பலவீனமாக்குவேன்.

14நீ சாப்பிட்டும் திருப்தியடையாமல் இருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; பாதுகாத்தும் நீ தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன்.

15நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சைப்பழங்களையும் ஆலையாடினாலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.

16நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய அனைத்துச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் மக்களின் நிந்தையைச் சுமப்பீர்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Micah 6 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran